Thursday, 10 April 2008

நட்பாராய்தல்

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.


ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு. நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக விளங்குவது தான் அது.

-- திருவள்ளுவர்

குறள் -- 796

Friday, 4 April 2008

அமைச்சு

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு


மன வலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலங்களின் தூய்மையும் சிறந்திருப்பவனே அமைச்சன்.

-- திருவள்ளுவர்

குறள் - 632

அறிவு உடைமை

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து



செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்.

-- திருவள்ளுவர்


குறள் 431

Tuesday, 1 April 2008

பாரதிதாசன் ஒரு பார்வை

உன்னை நான் நேசிக்கிறேன்

ஒரு தாமரை பூவில்..
பரணன் முதல் பாரதிவரை
பெண்ணின்
கன்னச்சிவப்பை காண்கையில்
உழைக்கும் தோழரின்
கைகளின் சிவப்பைக்
கண்டவன் நீ என்பதால்..
உன்னை நான் நேசிக்கிறேன்.. !!

காதலித்துப் பார்

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்

காதலித்துப் பார்

***

தலையணை நனைப்பாய்
மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைக்கூட உன்னை
கவனிக்காது
ஆனால் – இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்தப் பூக்கள்
எல்லாம்
காதலை கௌரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்

காதலித்து பார்

***

இருதயம் அடிக்கடி
இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்
உனதுகுரல் மட்டும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்

பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்

காதலித்துப் பார்

***

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை
அடைந்ததுண்டா?

உன்னையே உனக்குள்ளே
புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம்
அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்
அமிர்தம் இருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப் பார்

***

சின்னச் சின்னப் பரிசுகளில்
சிலிர்க்க முடிமே

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே

அதற்காகவேனும்

காதலித்துப் பார்

***

சம்பிரதாயம்
சட்டை பிடித்தாலும்

உறவுகள்
உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்
உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில்
அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப் பார்

சொர்க்கம் – நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துப் பார்