அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு
இரண்டுழுந் தனவால் பகையே ஒன்றே
பூப்போல் உண்கண் பசந்துதோள் நுணுகி
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே
விழவுஇன்று ஆயினும் படுபதம் பிழையாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறைநீர்க்
கைமான் கொள்ளு மோஎன
உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே
-- ஔவையார்
பொருள் :
பூத்த தும்பைப்பூ மாலை அணிந்த அழகிய வலிமை மிக்க மார்பும், நீண்டு திரண்ட பெரிய கையும் உடைய எம் தலைவன் நெடுமானஞ்சியின் பிள்ளையாகிய இவனுக்கு இரு பெரும் பகைகள் உள்ளன. ஒன்று, பூப்போல் அழகிய மையுண்ட கண்கள் பசலை நோய் கொண்டு தோள் மெலிய இவன் அழகை கண்டு நெஞ்சம் பறி கொடுத்த காதல் மகளிர்க்கு பிரிவு துயரை கொடுப்பது. இன்னொன்று விழா சிறப்பு இல்லையென்றாலும், செம்மறியாட்டுக் கறியோடு செய்த உணவு மிஞ்சாது உண்ட தம் சுற்றத்தாரோடு,ஆறுகுளம் முதலிய நீர்த் துறைகளிலும் இவனது போர் யானைகள் வந்து புகுந்து விடுமோ என ஊர்மக்கள் பயந்து ஓடும் அச்ச உணர்வு.
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. இவனுடைய பேரழகும் பேராண்மையும் இவனுக்குள்ள பெரும் பகை என்று உயர்வு நவிற்சி தோன்ற பாடப்பட்ட பாடல்.
திணை -- பாடாண் திணை
துறை -- இயன் மொழித் துறை


No comments:
Post a Comment