சாதிக ளில்லையென்றும்
தாழ்ச்சிக ளில்லையென்றும்;
வீதியில் சொல்வா ரடி! - கிளியே!
வீட்டினில் வேறா மடி!
இத்தனை நீதிகளில்
இங்கிவர் கூறுகின்ற
சத்தியம் பொய்யா னதே! - கிளியே!
சாதியம் மெய்யா னதே!
நித்தம் பிரிப்பதிலே
நேரங் கடத்துகின்ற,
பித்தரென் றானா ரடி! - கிளியே!
பேடியென் றானா ரடி!
மன்னுயி ரத்தனையும்
மாசக்தி வடிவென்னுந்
தன்மையைச் சொன்னா னடி! - கிளியே!
தானென்று தாழ்ந்தோ மடி!
வண்ணங்கள் மாறிடினும்
மாந்தர்கள் ஓரினமென்று
உண்மையைச் சொன்னா னடி! - கிளியே!
ஓர்ந்துநாம் உய்வோ மடி!
ஆழ்ந்திடுங் கல்வியெனும்,
அற்புதச் சாவியினால்
தாழ்வெனும் பூட்டினை யே! - கிளியே!
திறக்க லாகு மடி!
தாழ்ந்தவர் உயர்விற்கு
தாழென இருக்கின்ற
சூழ்மது மயக்க மடி! - கிளியே!
தூக்கி யெறிவோ மடி!

